காஞ்சிபுரம்:ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 மோசடி நிதி நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவதும் 2.91 லட்சம் ரூபாய் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடி செய்துள்ளது. இதில், சென்னையை மையமாகக் கொண்டுள்ள ஆருத்ரா நிதி நிறுவனம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்களை ஏமாற்றி உள்ளது.
அதிக வட்டி தருவதாகக் கூறி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர்கள், முகவர்கள் என ஏராளமானோரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், செய்யார், உத்திரமேரூர் மற்றும் மானாமதி பகுதிகளில் ஆருத்ரா நிதி நிறுவன முகவராக நாகராஜ் என்பவர் செயல்பட்டு வந்தார்.
இவர், 2021 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜெம் நகர் பகுதியில் வசித்து வரும் ஸ்டீபன் (63) மற்றும் சுகுணா தேவி (59) என்ற வயதான தம்பதியினரை அணுகி ஆசை காட்டி உள்ளார். அதிக வட்டி கிடைக்கும் எனக்கூறி வயதான அந்த தம்பதியினரின் வீட்டை விற்க வைத்து அந்தப் பணத்தை முதலீடு செய்ய வைத்ததாக தெரிகிறது. அவர்கள் வீட்டை ரூ.26 லட்சத்திற்கு தனது பெயருக்கு நாகராஜ் மாற்றிக் கொண்டு, அதில் ரூ.6 லட்சத்தை முதியவர் ஸ்டீபனின் வங்கி கணக்கிற்கு செலுத்தி விட்டு, மீதமுள்ள ரூ.20 லட்சத்தை ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்ததாக கூறப்படுகிறது.
2021ஆம் ஆண்டு ஆருத்ரா நிதி நிறுவனத்தில் ரூ.20 லட்சம் முதலீடு செய்து 3 மாதங்கள் மட்டுமே, மாதம் ஒரு லட்சம் என ஸ்டீபன் தம்பதிகளுக்கு கொடுக்கப்பட்டது. கடந்த 2022 ஏப்ரல் மாதம் ஆருத்ரா நிதி நிறுவனத்தின் மோசடி அம்பலமாகி அதன் வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் முடக்கினர்.