காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உள்பட்ட மொளசூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பத்மாவதி-சந்தோஷ்குமார் தம்பதியர். பத்மாவதி அங்கன்வாடி ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்தத் தம்பதியருக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு இல்லை. இதனால் மத்திய அரசின் தத்துப் பிள்ளைகள் வளர்ப்புத் திட்டத்தின்கீழ் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்க்க இவர்கள் பதிவு செய்திருந்தனர்.
இதனிடையே தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அங்கன்வாடி ஊழியர் பத்மாவதி பணி செய்ய முன்னதாக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராவிதமாக கடந்த 10ஆம் தேதியன்று மகாராஷ்டிராவில் இருந்து ஒரு அழகிய ஆண் குழந்தை, மத்திய அரசின் நடைமுறை விதிகளோடு பத்மாவதிக்கு தத்து கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், பதிவு செய்த குறுகிய காலத்திலேயே தனக்கு குழந்தை கிடைத்ததால், தன்னால் தேர்தல் பணி மேற்கொள்ள இயலாது என்ற கோரிக்கையுடன் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தேர்தல் அலுவலரை பத்மாவதி சந்திக்க முயன்றுள்ளார். ஆனால், அங்கு தேர்தல் அலுவலரை அவர் சந்திக்க முடியாததால், மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள தேர்தல் பிரிவில் விடுப்பு கேட்டு விண்ணப்பிக்க வந்துள்ளார். விதிமுறைகளுக்கு உள்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தம்பதியினரிடம் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
விடுப்பு கேட்டு தத்துக் குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த அங்கன்வாடி ஊழியர் இதனையடுத்து தாங்கள் தத்தெடுத்த, பிறந்து சில நாள்களே ஆன கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பத்மாவதி-சந்தோஷ்குமார் தம்பதியர் வந்தனர். "மத்திய அரசின் தத்துப் பிள்ளைகள் வளர்ப்பு சான்றிதழ் வைத்தே விடுப்பு அளித்திருக்கலாமே? ஏன் கைக்குழந்தையை எடுத்துவருமாறு அலுவலர்கள் கூறினர்?" என இதுகுறித்து அங்கிருந்தவர்கள் வேதனைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க :கரோனா அச்சுறுத்தல்: பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு!