இந்தியாவில் திமிங்கிலத்தின் கொழுப்பான அம்பர் கிரீஸை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாடுகளில் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த அம்பர் கிரீஸை பெரும் விலைக்கு வாங்கி உபயோகித்து வருகின்றன.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வனத்துறை எல்லைக்கு உள்பட்ட மாங்காடு பகுதியில், சட்ட விரோதமாக அம்பர் கீரிஸை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பதுக்கி வைத்து வெளி மாநிலங்கள், நாடுகளுக்கு கடத்துவதாக ஶ்ரீபெரும்புதூர் வனச்சரக காவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்று வனச்சரக காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் திமிங்கிலத்தின் அம்பர் கிரீஸ் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அம்பர் கிரீஸ் கடத்த முயன்ற முருகன் (53), கிருஷ்ணமூர்த்தி (30), ரஞ்சித் (36), விஜயபாஸ்கர் (56) ஆகிய நான்கு பேரை காவலர்கள் கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் கடலூர், கடலோர பகுதியில் உள்ள மீனவர்கள் மீன் பிடிக்கும்போது அம்பர் கிரீஸ் சிக்கியதாகவும், அவற்றைக் கடத்தி வெளிநாட்டிற்கு விற்பனை செய்ய முயன்றதையும் ஒப்புக்கொண்டனர். இதன் மதிப்பு சுமார் 20 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.