கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஓராண்டுக்கும் மேலாக கல்லூரிகள் திறக்கப்படாத காரணத்தால் மாணவர்கள் அனைவரும் தேர்வில்லாமலே 'ஆல் பாஸ்' என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அரியர் மாணவர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்திருந்த நிலையில், 'ஆல் பாஸ்' என்ற அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் அண்ணா பல்கலைக்கழக அரியர் மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தப்படியே ஆன்லைன் மூலமாகத் தேர்வு எழுதினர்.
இந்தநிலையில் அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வு முறையாக நடைபெறவில்லை எனவும், தேர்வு முடிவுகள் சரிவர வெளியிடப்படாததால் மறு தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடக்கோரி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்களான பரணிதரன், நவீன் ஆகிய இரு முன்னாள் மாணவர்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அம்மனுவில், இம்முறை நடந்த அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு எழுதிய மாணவர்கள் பல இன்னல்களை தொழில்நுட்ப ரீதியாக சந்தித்தனர். தேர்வு எழுதும்போது, கணினியில் நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று சொல்லி ஆன்லைன் தேர்தவில் இருந்து தானாகவே வெளியே வந்தது.
சில மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு இணையதள பக்கத்தில் நுழைய முடியவில்லை. இதன் காரணமாக தற்போது வெளிவந்துள்ள தேர்வு முடிவுகள் 70 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மாணவர்கள் அனைவரும் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர்.
இதுவரை அரியர் வைக்காத மாணவர்கள் கூட தேர்வில் தோல்வி என தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, மாணவி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டார். பல மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றனர்.
ஆல் பாஸ் என அறிவித்து 23 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை தமிழ்நாடு அரசு கேள்வி குறியாக்கியுள்ளது. மேற்படிப்புக்குச் செல்ல முடியாமலும், வேலைக்குச் செல்ல முடியாமல் பொருளாதார ரீதியாகவும் நெருக்கடியைச் சந்தித்து வருவதால், மீண்டும் அண்ணா பல்கலைக்கழகம் மறுத் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும்" என, அதில் குறிப்பிட்டுள்ளனர்.