தமிழ்நாடு முழுவதும் வருகிற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் பெருநகராட்சி, மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டு முதன்முறையாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
குறிப்பாக மாநகராட்சியின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் மேயர் பதவியைக் குறிவைத்து பெண் வேட்பாளர்களை அரசியல் கட்சியினர் களமிறக்கியுள்ளனர்.
முதன்முறையாகத் தேர்தலில் களம்காணும் அதிமுக, திமுக பெண் வேட்பாளர்கள் காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமைக்குரிய வரலாற்றில் இடம்பிடிக்க போட்டா போட்டுக்கொண்டு வாக்காளர்களைக் கவர்ந்துவருகின்றனர்.
பெண் வேட்பாளர்களுக்கு நிகராக நாங்களும் சளைச்சவங்க இல்ல அந்த வகையில், கவரப்பட்டு நெசவு செய்தும், தையல் கடையில் துணிகளுக்குத் தையல் தைத்து கொடுத்தும், தேநீர்க் கடைகளில் தேநீர் போட்டுக்கொடுத்தும், உணவகங்களில் பூரி மாவை திரட்டிக் கொடுத்தும், ஆம்லெட் போட்டுக்கொடுத்தும், காய்கறி, மளிகைக் கடைகளில் விற்பனை செய்தும் எனப் பல்வேறு யுக்திகளைத் தங்களது பரப்புரையின்போது பயன்படுத்தி வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றனர்.
நாங்களும் சளைச்சவங்க இல்ல
இந்நிலையில் பெண் வேட்பாளர்கள் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துவரும் நிலையில், பெண்களுக்கு நிகராக நாங்களும் சளைச்சவங்க இல்ல என்ற தொனியில் தற்போது ஆண் வேட்பாளர்களும் பல்வேறு தேர்தல் யுக்திகளை களமிறக்கியுள்ளது வாக்காளர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி நான்காவது வார்டுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பாலாஜி தற்போது திடீர் சமையல் மாஸ்டராக மாறியுள்ளார்.
மாநகராட்சி நான்காவது வார்டுக்கு உள்பட்ட கம்மாள தெரு, பவளவண்ணார் கோவில் மாட வீதி, புதிய ரயில்வே நிலையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இன்றைய தினம் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது தேநீர்க் கடையில் தேநீர் போட்டுக்கொடுத்தும், பாஸ்ட் புட் கடை ஒன்றில் திடீர் சமையல் மாஸ்டராக மாறி சிக்கன் ரைஸ் போட்டுக் கொடுக்கும், இறைச்சிக் கடை ஒன்றில் கறி வெட்டிக் கொடுத்தும், சாலையோர உணவகத்தில் பரோட்டா சுட்டுக் கொடுத்தும் வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து துண்டுப்பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டது வாக்காளர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க:பொய்யான வாக்குறுதிகளை அளித்து குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்த திமுக - இபிஎஸ்