காஞ்சிபுரம் :சின்னத்திரை நடிகை சித்ரா செம்பரம்பாக்கம் அருகே உள்ள விடுதியில் டிசம்பர் 9ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள நசரத்பேட்டை காவல்துறையினர், தற்கொலையை தூண்டியதாக, சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை கடந்த 14ஆம் தேதி கைது செய்தனர்.
பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹேம்நாத் ஆர்.டி.ஓ விசாரணைகாக இன்று (டிச.17) காலை சுமார் 8 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி ஒ அலுவலகத்தில் அலுவலர் திவ்யஸ்ரீ முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அவரிடம் மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது ஹேம்நாத்தை காண்பதற்காக அவரது தந்தை ரவிச்சந்திரன் வழக்குரைஞருடன் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு வந்தார்.
நடிகை சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன் மகனை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த ரவிச்சந்திரன் கூறுகையில், "விசாரணை ஒரு பக்கமாகவே நடைபெறுவதாக தெரிகிறது. சித்ராவின் நெருங்கிய வட்டாரங்களில் விசாரணை நடைபெற்றதாக தெரியவில்லை. என் மகனிடம் 6 நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில் 7ஆவது நாள் விசாரணையில் ஆர்டிஓ விசாரணைக்கு முன்பு அவசர அவசரமாக கைது செய்யப்பட்டார். சித்ராவின் செல்போன் தகவல்களை ஆராய்ந்து, அதில் கிடைக்கும் தகவல்களை ஆராய வேண்டும்.
சித்ரா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறிய ரவிச்சந்திரன்:
சித்ராவிற்கு ஏதோ ஒரு வகையில் பெரிய மன அழுத்தம் இருந்துள்ளது. மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். எனவே, அந்த மன அழுத்தம் மிரட்டலா அல்லது வேறு ஏதும் காரணமா என காவல் துறை கண்டுபிடிக்க வேண்டும்.
ஏனென்றால் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் வாங்கிய வீட்டின் மீதான கடன் தொகையை அடைக்க பணம் தரும்படி என்னிடம் சித்ரா கேட்டபோது, நான் சம்மதம் தெரிவித்தேன். ஆகையால் ஏதேனும் பொருளாதாரப் பிரச்னைகளில் சிக்கியிருந்தாரா இல்லை அது சம்பந்தமாக யாரேனும் மிரட்டினார்களா என தெரியவில்லை.
இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பாக என்னிடம் நன்றாக பேசினார். சித்ராவின் இறப்புக்கு வரதட்சணை கொடுமை காரணம் இல்லை என அவரது தந்தை ஆர்.டி.ஓ விசாரணையில் தெரிவித்துள்ளார். அவர் இறக்கும் போது என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை" என்றார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹேம்நாத்தின் வழக்குரைஞர் விஜயகுமார், "இது தனிப்பட்ட இருவரின் சண்டை கிடையாது. இது ஒரு பிரபலத்தின் தற்கொலை என்பதை நினைவில் வைத்து விசாரணை நடத்த வேண்டும். இறப்பதற்கு முன்பு வரை இரு குடும்பத்தினரும் இணைந்து திருமண வேலைகளை பார்த்து வந்துள்ளனர். சித்ரா கார் வாங்கியுள்ளார். புதிதாக வீடு கட்டியுள்ளார். இதனால் பொருளாதார ரீதியாக பிரச்னை வந்திருக்கலாம். எனவே, இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உயர் அலுவலர்களிடம் புகார் அளிக்கவுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:அவசர கதியில் என் மகனை கைது செய்து விட்டார்கள்' - நடிகை சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன்