காஞ்சிபுரம்: தமிழ் திரை உலகில் குறிப்பிடத்தக்க நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளவர் நடிகர் ராகவா லாரன்ஸ். முதலில் திரையுலகில் நடன இயக்குனராக அறிமுகமானவர், அதன் பின் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து மக்கள் மனதில், குறிப்பாக குழந்தைகள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். காஞ்சனா போன்ற காமெடி கலந்த பேய் படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென தனி பாணியை வகுத்துக் கொண்டார் ராகவா லாரன்ஸ்.
நடனம், நடிப்பு ஆகியவற்றோடு நில்லாமல் இயக்குநராகவும் திரைத்துறையில் வலம் வருகிறார். இந்நிலையில் அடுத்த மாதம் வரவுள்ள விநாயகர் சதுர்த்தி அன்று இவரது சந்திரமுகி 2 திரைப்படம் வெளிவர இருக்கிறது. எனவே, அந்த படம் வெற்றி பெற வேண்டி ராகவா லாரன்ஸ், காஞ்சி சங்கர மடத்திற்குச் சென்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபாடு மேற்கொண்டார்.
அதன் பின்னர் புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். ராகவா லாரன்ஸ் கோயிலுக்கு வந்ததை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர், அவருடன் செல்பி எடுக்க ஆர்வமுடன் கூடி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். காமாட்சி அம்மனை தரிசனம் செய்ய வந்த ராகவா லாரன்ஸ்காக சிறப்பு தீபாராதனை செய்து வழிபாடு செய்தவுடன், கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.