காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் சாலை பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் பிரதான சாலையாகும். ஆகையால், எப்போதும் வாகன ஓட்டிகள் அதிகளவில் நிறைந்து காணப்படும்.
இந்நிலையில், வையாவூர் சாலையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென சாலையின் வலது பக்கம் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் செல்ல முற்படும்போது, அவரின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், தனது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி சாலையில் விழுந்தார். இதில் அந்நபருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து அங்கே இருக்கக்கூடிய சிசிடிவியில் பதிவானது. இவ்விபத்து நடந்து முடிந்த சிறிது நேரத்தில், அதே இடத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர் மீது கண்மூடித்தனமாக வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் மோதியதில், இருவரும் சாலையில் கீழே விழுந்தனர். இதில் முதியவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.