காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா, சயனாபுரம் கிராமம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர், தயாளன். இவரது மகன் ஜானகிராமன் (21). தந்தை தயாளனுக்கு உதவியாக ஜானகிராமனும் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். தங்கள் நிலத்தில் விளைந்த பூக்களை அறுவடை செய்து காஞ்சிபுரத்தில் உள்ள பூக்கடைச் சத்திரம் பகுதியில் விற்பனைக்கு கொடுத்துவிட்டு ஜானகிராமன் நேற்று மாலை அவரது யமஹா இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
ஜானகிராமன் அவரது வீட்டிற்கு செல்வதற்காக காஞ்சிபுரம் - திருப்பதி மாநில நெடுஞ்சாலையில் படுநெல்லி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே திருப்பதியிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து, ஜானகிராமனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஜானகிராமன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மேலும் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து ஓடினார். இதனை அடுத்து சம்பவ இடத்தில் திரண்ட ஜானகிராமனின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் கண்ணாடியையும், பேருந்தையும் அடித்து சேதப்படுத்தினர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாலுகா காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாததால் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து 30-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.