கரோனா பெருந்தொற்று காலத்தில் மட்டுமல்லாது சாதாரண காலங்களிலும் பரபரப்பாகவே இயங்கி கொண்டிருக்கின்றனர் ஆம்புலன்ஸ் ஊழியர்கள். எங்கு, எப்போது, யார் அழைத்தாலும் அடுத்த சில நிமிடங்களில் களத்தில் நிற்கும் 108 ஆம்புலன்ஸ் வசதி, உயிரை காக்க மட்டுமல்லாது, புது உயிர் ஜனிக்கவும் அளப்பறிய சேவையாற்றுகிறது. 24 மணி நேரமும் ஓய்வின்றி இயங்கும் ஆம்புலன்ஸ், இக்கட்டான சூழலில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்வது வாடிக்கையாக உள்ளது.
இதை சரி செய்ய புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளனர் காஞ்சிபுரம் மாவட்டம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவிகள் கீர்த்திகா, கவிதா, ஜெயஸ்ரீ ஆகியோர். இறுதி ஆண்டு கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை மாணவர்களான இவர்கள், அவசரகால சேவையாக உள்ள உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் சேவையில் புதியதோர் படைப்பை படைக்க விரும்பி, தங்கள் துறை உதவி பேராசிரியரான ரீட்டாவை அணுகியுள்ளனர்.
தொடர்ந்து, உதவிப் பேராசியர் ரீட்டாவின் ஆலோசனையின்பேரில், வளர்ந்து வரும் தொடர் போக்குவரத்து நெரிசல் காரணமாக போக்குவரத்து பாதிப்பில் சிக்காமல் சாலையில் எவ்வித தங்கு தடையின்றி ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல ஏதுவாக, புதியோர் கண்டுபிடிப்பினை படைக்க வேண்டும் என எண்ணி அதற்கான தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
மாறும் சிக்னல்கள்.. ஆம்புலன்ஸ்க்கு வழி..
அதன் விளைவாக, தற்போது உள்ள விஞ்ஞான தொழில்நுட்பங்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் வருகின்ற சாலையிலுள்ள போக்குவரத்து சிக்னல்களில், ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்கூட்டியே சுமார் 120 மீட்டர் முன்னதாகவே அதற்காக பொருத்தப்பட்டுள்ள ஒலி சென்சார் மூலமாக ஆம்புலன்ஸ் வாகனத்திலிருந்து வரும் அவசரக்கால ஒலியை வைத்து, ஆம்புலன்ஸ் கடக்கவிருக்கும் போக்குவரத்து சிக்னல்களின் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள கருவியின் மூலமாக, சிவப்பு நிறத்தில் இருக்கும் சிக்னலானது பச்சை நிறத்திற்கு மாற்றப்படும்.
குறிப்பாக போக்குவரத்து ஜங்சனில் இவ்வாறு மாற்றம் செய்யும் அதே வேளையில், மற்ற மூன்று வழிச் சாலையின் சிக்னல்கள் அனைத்தும் சிவப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்படும். இதனால் ஆம்புலன்ஸ் வாகனம் எவ்வித போக்குவரத்து பாதிப்பிலும் சிக்காமல், தொடர்ந்து தங்குதடையின்றி சாலையில் பயணிக்க முடியும்.