காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் பகுதியில் பத்து வருடங்களுக்கும் மேலாக இணைப்பு இல்லாத நிலையில் மின்கம்பங்களில் மின்கம்பிகள் இருந்து வந்துள்ளன. இந்த மின்கம்பிகள் கடந்த ஒரு சில நாள்களுக்கு முன்பு அறுந்து கீழே விழுந்துள்ளது.
இந்த நிலையில் வடமங்கலம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த பார்த்திபன் (48) என்பவர் மின்கம்பி அறுந்து விழுந்திருப்பதை அறியாமல் அவ்வழியாக சென்றுள்ளார். அப்போது, வழியில் கிடந்த மின்கம்பியைக் கண்ட அவர், அதில் மின்சாரம் வருவதை அறியாமல் அதனை ஓரமாக அகற்ற மின்கம்பிகளை எடுத்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பார்த்திபன் உயிரிழந்த அதே இடத்தில் கடந்த ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு மின் கம்பி அறுந்து விழுந்து 7 மாடுகள் உயிரிழந்துள்ளன. இதனால் அவ்வழியாக செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த மின் கம்பிகளில் மின் இணைப்பு இல்லை என்று வடமங்கலம் பகுதி மக்கள் நம்பியிருந்தனர். அதேபோன்றுதான் பார்த்திபனும் மின் இணைப்பு இல்லை என நம்பி கம்பிகளை பிடித்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் பார்திபன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், " மாடுகள் இறந்த பின்பு தொடர்ந்து இந்த மின் கம்பிகளை அகற்ற கோரி மின்வாரிய துறையினரிடம் கூறி வந்தோம். மின்சார கம்பிகளை மின்சார வாரிய ஊழியர்கள் அகற்றியிருந்தால் இந்த உயிர் சேதத்தை தவிர்த்திருக்கலாம். இதன் பிறகாவது, மின்சார ஊழியர்கள் உடனடியாக மின் கம்பிகளை அகற்ற வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தனர்.