காஞ்சிபுரம் மாவட்டம் நீர்வள்ளூரைச் சேர்ந்தவர் கோவிந்தன் (72). இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கோவிந்தன் தனது மகன் கிருஷ்ணனுடன் வசித்து வருகிறார். கிருஷ்ணனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரனமாக மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால், கோவிந்தனும் மகன் கிருஷ்ணனும் நீர்வள்ளூர் கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.
நேற்று ( ஏப்.06 ) கிருஷ்ணன் வெளியில் சென்றிருந்த நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்துவிட்டு முதியவர் கோவிந்தன் மாலை வீடு திரும்பி வந்து உறங்கியுள்ளார். வெளியில் சென்று வீடு திரும்பிய கிருஷ்ணன் வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது தந்தை கோவிந்தன் இறந்த நிலையில் இருந்துள்ளார்.
வயது முதிர்வின் காரணமாக தந்தை இறந்ததாக எண்ணிய மகன் கிருஷ்ணன், தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு தனது தந்தையின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணன் செய்ய தொடங்கினார். செலவுக்காக பீரோவிலிருக்கும் பணத்தை கிருஷ்ணன் எடுக்க சென்றார்.
அப்போது, பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 15 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் பணம் திருடுபோனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது குறித்து தாலுகா காவல் நிலையத்திற்கு கிருஷ்ணன் தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், வீட்டில் சோதனை நடத்தி, தடயவியல் நிபுணர்களை வரவழைத்து, கைரேகை தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் வினோத் சாந்தாராம் ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியைத் தேடினர். கிருஷ்ணன் வீட்டின் அருகாமையிலிருந்த சிசிடிவி பதிவுகளை காவல் துறையினர் சோதனை செய்தனர். அதில், உயிரிழந்த கோவிந்தனின் தம்பி வெங்கடேசனின் மகனான பாட்ஷா என்கிற பாஸ்கர், கோவிந்தனின் வீட்டின் பின்புறமாக வீட்டிற்குள் சென்றது கண்டறியபட்டது.
இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர், தாமல் பகுதியில் உள்ள பாட்ஷா வீட்டிற்குச் சென்று அவரிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரனையில், தனது பெரியப்பாவிற்கு மதுபானத்தில் மருந்து கலக்கி கொடுத்து கொலை செய்ததையும், அவரிடம் இருந்த சாவியை எடுத்துச் சென்று அறையைத் திறந்து பீரோவில் இருந்த பணத்தை கொள்ளை அடித்ததையும் ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து, பாஸ்கரை கைது செய்த காவல் துறையினர், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை உறவினர் வீட்டில் மறைத்து வைத்திருந்ததையும் கண்டறிந்து அதனையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் பாஸ்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:தோழியை சீரழித்த மந்திரவாதி.. ஆணுறுப்பை அறுத்து கொலை நண்பர்கள்.. தருமபுரி வழக்கில் திடீர் திருப்பம்!