தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெனரேட்டர் பேனில் சிக்கிய சிறுமியின் தலைமுடி.. கோயில் திருவிழாவில் சோகம்.. - காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜெனரேட்டர் பேனில் தலைமுடி சிக்கியதால் படுகாயமடைந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 14, 2023, 8:09 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சந்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காண்டீபன்-லதா தம்பதி. இவர்களுக்கு மூன்று மகள்கள். அனைவரும் திருமணம் ஆகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். இதில் மூன்றாவது மகள் சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இந்த தம்பதிகளுக்கு லாவண்யா (13) என்ற மகளும், புவனேஷ் (9) என்ற மகனும் உள்ளனர். நான்கு வருடங்களுக்கு முன்பு சரவணனின் மனைவி இறந்துவிட்டார்.

இதனால், சரவணன் தன்னுடைய 2 குழந்தைகளையும், விச்சந்தாங்களில் உள்ள மாமனார், மாமியார் பராமரிப்பில் விட்டிருந்தார். ஆகவே, தாத்தா, பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வரும் லாவண்யா மற்றும் புவனேஷ் இருவரும் களக்காட்டூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முறையே ஏழாம் வகுப்பு, நான்காம் வகுப்பு படித்து வந்தனர். இதில் லாவண்யா படிப்பில் மிகவும் சுட்டிப்பெண். பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்கி உள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு விச்சந்தாங்கள் கிராமத்தில் அங்காளம்மன் கோயிலின் கடைசி நாள் விழா நடைபெற்றது. அப்போது, மாட்டு வண்டியில் வைத்து சாமி ஊர்வலம் நடந்து கொண்டிருந்தபோது மாட்டு வண்டியின் பின்புறம் மின்விளக்கு அலங்காரத்துக்காக ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. இந்த மாட்டு வண்டியில் ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அருகில் லாவண்யா மற்ற சிறுவர், சிறுமியர்களுடன் அமர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அப்பொழுது அங்கிருந்த ஜெனரேட்டரில் சுற்றிக் கொண்டிருந்த பெரிய பேனில் லாவண்யாவின் தலைமுடி சிக்கிக்கொண்டதாக தெரிகிறது . இதனால் லாவண்யாவும் பேனால் இழுக்கப்பட்டு படுதாயமடைந்தார். அவரது தலைமுடிகள் வேரோடு பிடுங்கப்பட்டன. இதனால் லாவண்யா மயக்கமுற்று கீழே விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் சிறுமியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் அவசர சிகிச்சை ப் பிரிவில் சேர்த்தனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுமி லாவண்யா நேற்று பரிதாபமாக உயரிழந்தார். பிரேத பரிசோதனை முடித்து நேற்று மாலை சிறுமியின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக ஜெனரேட்டர் வாடகை விடும் தொழில் செய்யும் முனுசாமி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவிழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற சுட்டிப்பெண் லாவண்யாவின் எதிர்பாராத அகால மரணம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:பரப்பளவில் விரிவடையும் சென்னை நகரம்.. சிஎம்டிஏ திட்டம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details