தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரம் அருகே வீட்டில் சடலமாக இறந்து கிடந்த பெண் - Crime news

காஞ்சிபுரம்: மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்குவந்த பெண்மணியை ஐந்து நாள்கள் கழித்து தாலுக்கா காவல் துறையினர் சடலமாக மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் அருகே வீட்டில் சடலமாக பெண் மீட்பு
காஞ்சிபுரம் அருகே வீட்டில் சடலமாக பெண் மீட்பு

By

Published : Jun 25, 2021, 5:56 PM IST

காஞ்சிபுரம் பெருநகராட்சி 45ஆவது வார்டுக்கு உட்பட்ட தாயார் குளம் அண்ணாநகர் பகுதியில் வசித்துவருபவர் பால சரஸ்வதி (60). இவருடைய கணவர் ராஜமாணிக்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பாலசரஸ்வதிக்கு தங்கவேலு (35) என்ற மகன் உள்ளார். இவர் கார் ஆக்டிங் ஓட்டுநராகப் பணிபுரிகின்றார்.

இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி இவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து இரண்டாவது திருமணம் செய்துகொண்ட இவர், தாயின் வீட்டின் அருகே வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இரண்டாவது திருமணம் செய்துகொண்ட காரணத்தினால் மகன், மருமகளிடம் பாலசரஸ்வதி பேசாமல், பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகம் ஒன்றில் பணிசெய்து தன்னைத் தானே பராமரித்துக் கொண்டுவருகிறார்.

பாலசரஸ்வதி

உடற்கூராய்வு

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று உடல்நிலை சரியில்லை என 108 அவசர ஊர்தி மூலம் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைபெற்று, மருந்து மாத்திரைகளையும் வாங்கிக்கொண்டு ஞாயிறு அன்று வீட்டுக்கு வந்துள்ளார். அவரை அந்தப் பகுதியில் உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமை பார்த்து பேசியுள்ளனர்.

அதன் பின்னர் அவரை யாரும் பார்க்கவில்லை. இந்நிலையில் அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவலளித்தனர். தகவலின்பேரில் அங்குவந்த காவல் துறையினர் அறையின் கதவை உடைத்து உள்ளேசென்று பார்த்தபோது, இரும்புக் கட்டிலில் பாலசரஸ்வதி படுத்த படுக்கையில் சடலமாக இறந்து கிடந்திருந்தார். இவர் இறந்து ஐந்து நாள்களான நிலையில், பாலசரஸ்வதியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'கரோனாவால் கணவர் உயிரிழப்பு: துக்கம் தாங்கமால் மனைவி, இரு குழந்தைகள் தற்கொலை'

ABOUT THE AUTHOR

...view details