காஞ்சிபுரம்:கோனேரிக்குப்பம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த திமுக தெற்கு மாவட்ட பிரதிநிதி, சேகர் (52). இவரது மனைவி சைலஜா நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.
இந்நிலையில், திமுக பிரமுகர் சேகர் கடந்த மாதம் 25ஆம் தேதியன்று, தனது இருசக்கர வாகனத்தில் கோனேரிக்குப்பதில் உள்ள தலையாரி தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள், அவரிடம் பேசுவதுபோல் நெருங்கி திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
தனிப்படை விசாரணை
இதனால் படுகாயமடைந்த சேகர் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று முதலுதவி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொலைச் சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல்துறை, தேர்தல் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று வழக்குப்பதிவு செய்து பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
4 பேர் கைது
மேலும், இதில் தொடர்புடைய அடையாளம் தெரியாத நபர்களை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின்பேரில், இரண்டு தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை வலைவீசித் தேடி வந்தனர். இந்நிலையில் மார்ச் 1ஆம் தேதியான நேற்று அதேப் பகுதியைச் சேர்ந்த இளவரசன் (26), சக்தி (எ) சதீஷ்குமார் (23), அஜித் (25), ரங்கா (19) ஆகிய நான்கு பேரினை காவல்துறையினர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
காவல்துறையால் கைது செய்யப்பட்ட இளவரசன், நடந்து முடிந்த உள்ளாட்சித்தேர்தலில் கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு பெண் உறுப்பினரின் தம்பி ஆவார். முன்னதாக, துணைத் தலைவர் பதவிக்கு தனது அக்காவை பரிந்துரை செய்ய கோனேரிக்குப்பம் சேகருக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
தனிப்படைக்கு எஸ்.பி. பாராட்டு
மேலும், கோனேரிக்குப்பம் ஊராட்சியில் உள்ள தொலைக்காட்சி கட்டடம் அகற்றப்பட்டு, அதில் வேறு ஒரு கட்டடத்தைக் கட்டுவதிலும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த இளவரசன் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து முன்விரோதம் காரணமாக இக்கொலை சம்பவத்தை அரங்கேற்றியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு கொலையாளிகளை விரைவாக கைது செய்த காஞ்சிபுரம் தாலுகா காவல்துறை மற்றும் தனிப்படையினரைக் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் வெகுவாகப் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு