காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வெள்ளரை பகுதியில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. தற்போது கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மதுபானக் கடை மூடப்பட்டிருந்தது.
சென்சாரில் சிக்கிய கொள்ளையர்கள்
இந்நிலையில் நேற்றிரவு (ஜூன் 2) சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலர் மதுபானக் கடையின் பின் பக்கம் உள்ள சுவற்றை உடைத்து மது பாட்டில்களை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
அப்போது கடையில் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த சென்சார் மூலம் கடையின் மேற்பார்வையாளர் புருஷோத்துக்குத் தகவல் சென்றுள்ளது.
இதுகுறித்து அவர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் கொள்ளையர்களைப் பிடிக்க சுற்றி வளைத்தபோது மூவரும் தப்பி ஓடினர்.
காவல் துறை விசாரணை
பின்பு கொள்ளையர்கள் பயன்படுத்தி வந்த இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்த காவலர்கள் வாகனத்தின் எண்ணை வைத்து டிரேஸ் செய்து பன்னீர், மகேந்திர குமார் (35), மகேந்திரன் (30) ஆகிய மூவரையும் பிடித்து அவர்களிடமிருந்து கொள்ளையடிக்க பயன்படுத்திய கடப்பாரை, இரும்பு ஆயுதங்களை கைப்பற்றினர். பின்னர் அவர்களிடம் காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.