காஞ்சிபுரத்தில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒரகடம் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர் காஞ்சிபுரம்:ஒரகடம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஏலக்காய் மங்கலம் பகுதியில் வசிப்பவர் விமலாமேரி. சில ஆண்டுகளுக்கு முன்பு விமலா மேரியின் கணவர் அமல்ராஜ் இறந்துவிட்டார். இவர்களுக்கு ஜெனிதா மேரி, ஷீபா( வயது 25) என இரு மகள்களும் அஜித் என்ற மகனும் உள்ளனர். ஷீபா குண்ணவாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 24 ம் தேதி காலை வழக்கம் போல வேலைக்குச் சென்ற ஷீபா மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இது குறித்து ஷீபாவின் அண்ணன் அஜித் தங்கை ஷீபா பணிபுரிந்த நிறுவனத்துக்குச் சென்று விசாரித்துள்ளார். மதியம் 1.30 மணியளவில் அனுமதி பெற்றுக்கொண்டு ஷீபா வீட்டுக்குச் சென்றுவிட்டதாக நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டது.இதனையடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடியும் ஷீபா எங்கும் கிடைக்கவில்லை.
இதனால் ஷீபாவின் உறவினர்கள் காணாமல் போன ஷீபாவை கண்டுபிடித்துத் தருமாறு 24.04.2023 அன்று இரவு 10 மணியளவில் ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் புகார் மனுவை வாங்காமல் இவர்களை விரட்டி அடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் 25-ஆம் தேதி மீண்டும் காவல் நிலையத்திற்குச் சென்று ஷீபாவை கண்டுபிடித்துத் தருமாறு புகார் மனு அளித்துள்ளனர். அதன் பிறகு மேற்படி புகாரை பகல் 12.00 மணிக்கு பெற்றுக் கொண்டு குற்ற வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், நீங்களும் தேடுங்கள் நாங்களும் முயற்சிக்கின்றோம் என பதில் அளித்துள்ளனர்.
இதனால் ஆவேசமடைந்த ஷீபாவின் உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் ஏலக்காய் மங்கலத்தில் இருந்து வேன் மூலம் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்திக்கச் சென்றனர். அங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் இல்லாத காரணத்தினால், இரவு 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை சந்தித்து காவல்துறையினர் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி கூறி, ஷீபாவைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன் பிறகு விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர், நேற்று மதியம், ஷீபாவின் காதலனான பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த சாமுவேல் (26) என்ற நபரை பிடித்து, காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில், ஷீபாவும் சாமுவேலும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வருவதாகவும், தான் கர்ப்பமாக இருப்பதால் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஷீபா வலியுறுத்தியதாகவும் சாமுவேல் கூறியுள்ளார்.
அதனால் தன்னுடைய காரில் ஷீபாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்ததில், ஷீபா கருத்தரிக்கவில்லை என உறுதியாகியுள்ளது. இதனால் ஆவேசமடைந்த சாமுவேல், குன்னம் அடுத்த அயிமசேரி பகுதியில் காரில் வைத்து ஷீபாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்து, சடலத்தை கொவளவேடு ஏரியில் உள்ள மதகில் போட்டுவிட்டு வந்து விட்டதாகவும் சாமுவேல் கூறியுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறினர்.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை 6 மணி அளவில் சாமுவேல் காண்பித்த இடத்தில் உள்ள மதகில் ஷீபாவின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்தில் ஏதும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு ஒரகடம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர்களும், டிஎஸ்பி, ஏடிஎஸ்பி போன்ற அதிகாரிகளும் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்தப் படுகொலை தொடர்பாக ஷீபாவின் உறவினர்கள் கூறும் போது, "சாமுவேல் மட்டுமே இந்த படுகொலையை செய்திருக்க வாய்ப்பில்லை, அவனுடன் சேர்ந்து ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் இந்தக் கொலையை செய்திருக்கலாம் என சந்தேகப்படுகின்றோம். எனவே இதற்கு முறையான விசாரணை செய்ய வேண்டும். அதேபோல் ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது வாங்காத காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒரகடம் காவல்நிலையத்தில் இருக்கும் போலீசார் தான் பெண்ணின் சாவிற்கு காரணம், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வரை நாங்கள் ஷீபாவின் சடலத்தை வாங்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் ஷீபாவின் சடலத்தைக் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பள்ளி சிறுமிக்கு முதியவர் பாலியல் தொல்லை வழக்கில் போக்சோ நீதிமன்றம் புதிய ஆணை!