புரெவி புயல் காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றைய முன்தினம் (டிச. 02) இரவுமுதல் மழை பெய்யத் தொடங்கியது. நேற்று இரவு முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்துவருகின்றது.
குறிப்பாக காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், வாலாஜாபாத், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகின்றது.
இதன் காரணமாக காலையில் பணிக்குச் செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் தாழ்வான பகுதியிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தொடர் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவிவருகின்றது.