காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே திருப்புலிவனம் கிராமத்தில், உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினரால், 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை சூலக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது,
“எங்களது கள ஆய்வில் திருப்புலிவனத்திலிருந்து மருதம் செல்லும் சாலையில் இந்த இரண்டு கற்களை கண்டறிந்தோம். இது விஜயநகர மன்னர்களின் காலத்தை சார்ந்ததாகும் 50 செ.மீ. அகலமும், 75 செமீ உயரமும் கொண்ட ஒரு கல்லும், அதன் அருகில் 35 செ.மீ அகலமும், 70 செ.மீ உயரமும் கொண்ட மற்றொரு கல்லும் உள்ளது.
இதில் கல்லின் இடதுபக்கம் சூலச் சின்னமும், அதன் கீழ் பன்றி உருவமும் உள்ளது. இது விஜய நகர மன்னர்களின் சின்னமாகும். வலப்பக்கத்தில் பெரிய உருவத்தில் கழுதையும், அதன் கீழ் பெரிய புறா உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. இது குலச்சின்னமாக இருக்க வாய்ப்புள்ளது. இது 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
மன்னர் காலங்களில் சிவன் கோயிலுக்கு தானமாக வழங்கப்படும் நிலங்களுக்கு அதன் எல்லையை குறிப்பதற்காக நான்கு திசைகளில் சூலச்சின்னம் பொறித்த கற்களை நட்டு வைப்பார்கள். இதற்கு சூலக்கற்கள் என்று பெயர். இந்நிலங்களுக்கு வரியை நீக்கி இறையிலி நிலங்களாக ஆலயங்களுக்கு மன்னர்கள் வழங்கினார்கள்.