தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உத்தரமேரூர் அருகே 1,200 ஆண்டு பழமையான முந்தைய மூத்த தேவி சிலை கண்டெடுப்பு! - காஞ்சிபுரம் அண்மைச் செய்திகள்

காஞ்சிபுரம்: உத்தரமேரூர் அருகே 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய மூத்த தேவி சிலையை உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.

உத்தரமேரூர் அருகே 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய மூ(த்த) தேவி சிலை கண்டெடுப்பு!
உத்தரமேரூர் அருகே 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய மூ(த்த) தேவி சிலை கண்டெடுப்பு!

By

Published : May 19, 2021, 12:36 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த வயலூர் கூட்டு சாலைக்கு அருகில் உள்ள உள்ளம்பாக்கம் இருளர் குடியிருப்பு பகுதியில், 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய பல்லவர் கால மூத்த தேவி என்ற ஜேஷ்டாதேவி சிலை ஒன்று உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “எங்களது கள ஆய்வில் கிடைத்துள்ள இந்த சிலை ஒன்றரை அடி மட்டுமே வெளியில் தென்படுகிறது. இடுப்பிற்கு கீழ் உள்ள பகுதி பூமியில் புதைந்த நிலையில் காணப்படுகிறது. இது 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் காலத்தைச் சார்ந்த மூத்த தேவி என்ற ஜேஷ்டாதேவி சிலையாகும். இதை அப்பகுதி மக்கள் எல்லை காத்தாள் என்கிறார்கள்.

மூத்த தேவியின் தலையில் கரண்ட மகுடம், கழுத்தில் அணிகலன்கள், தோள்பட்டைகளில் வாகு வளையங்கள், கைகளில் காப்பு காணப்படுகிறது. சிலையின் வலப்பக்கம் மாட்டுத்தலை கொண்ட அவரது மகன் மாந்தனும், இடப்பக்கம் அவளது மகளான மாந்தியும் காணப்படுகிறார்கள். மகளின் தலைக்கு மேலே காக்கை சின்னம் உள்ளது.

மூத்த தேவியை தவ்வை, ஜேஷ்டாதேவி எனவும் அழைப்பர். இவர் திருமாலின் மனைவியான லட்சுமி தேவியின் மூத்த சகோதரி. இவர் குறித்த தகவல்கள் சங்க இலக்கியங்கள், திருவள்ளுவர், அவ்வையார் போன்ற பெரும் புலவர்கள் எழுதிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்லவர் காலத்தில் வழிபாட்டின் உச்சத்தில் இருந்த இந்த தாய் தெய்வம், நந்திவர்ம பல்லவனின் குல தெய்வமாக இருந்திருக்கிறது. இதனால் பல்லவர் கால ஆலயங்களில் இச்சிலையை காணலாம். சில கோயில்களில் இவருக்கென்று தனி சன்னதியும் இருந்துள்ளது. பிற்கால சோழர் காலத்திலும் தொடர்ந்து வழிபாட்டில் இருந்த இந்த தெய்வம், வளமையின் அடையாளமாக போற்றப்பட்டது. பின்பு மூத்த தேவி என்பது மருவி மூதேவி ஆக வழக்கில் வந்து வழிபாடு இல்லாமல் போயுள்ளது. பழம் பெருமையையும், கடந்தகால வரலாற்றையும் பறை சாற்றும் இந்தச் சிலையை மண்ணில் இருந்து முழுமையாக எடுத்து தமிழ்நாடு தொல்லியல் துறை உரிய கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க : கரோனா நிவாரண நிதி அளித்த அன்புமணி: எவ்வளவு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details