காஞ்சிபுரம்:புத்தேரி கிராமத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லதா. ரஜினிகாந்த் - லதா தம்பதிக்கு 3 மகள்கள். முதல் மகள் பூஜா கல்லூரியில் படித்து வருகிறார். இரண்டாவது மகள் தனிஷியா காஞ்சிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ் வழியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
தனிஷியா பிளஸ் 1 வகுப்பில் ஆங்கிலம் தவிர அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் ஆங்கில பாடத்தில் குறைவான மதிப்பெண் பெற்று வருவதாக ஆசிரியர் கண்டித்துள்ளனர். மேலும், பள்ளிக்கு வரும்போது பெற்றோரை அழைத்து வர வேண்டும் என ஆசிரியர் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த தனிஷியா மாலை வீட்டுக்கு சென்றவுடன், வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
பணி முடிந்து வீட்டுக்கு சென்ற லதா, வீட்டின் அறையை திறந்து பார்த்தபோது, தனிஷியா இறந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ந்துள்ளார். பின்னர் உடனடியாக அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் தனிஷியாவை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.