கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நாச்சியார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் எழில் செல்வி. இவரும், நைனார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சிவாவும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளனர். சிவா லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்துவருகிறார். இத்தம்பதியினருக்கு இரண்டு வயதில் கன்சிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் உடன் பணிபுரியும், ஒலையனூர் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன், சிவா வீட்டிற்கு அடிக்கடி சென்றுவந்துள்ளார். அப்போது எழில் செல்வியுடன் ஏற்பட்ட பழக்கத்தில், நாளடைவில் இருவரும் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளனர். இதனையடுத்து ஒன்றாகச் சேர்ந்து வாழ முடிவெடுத்த இருவரும், கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் இருவரும் ஒன்றாக வாழத் தொடங்கியுள்ளனர். இதனால் வெறுப்படைந்த சிவா, வேறு ஊருக்குச் சென்று பணியாற்றிவருகிறார்.
இந்நிலையில் இன்று (ஜூன் 7) திடீரென திருமணத்திற்கு மீறிய உறவு கொண்டிருந்த எழில் செல்விக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி ஐயப்பன் மருத்துவனையில் அனுமதித்திருக்கிறார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சில மணி நேரத்துக்கு முன்னரே, கழுத்து இறுக்கப்பட்டு அவர் உயிரிழந்திருக்கிறார் எனத் தெரிவித்தனர். மருத்துவர்கள் அளித்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.