தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரதட்சணை கொடுமையால் கடிதம் எழுதிவைத்து விட்டுப்பெண் தற்கொலை...

திருக்கோவிலூரில் திருமணமான ஒரே ஆண்டில் வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 22, 2022, 3:23 PM IST

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர், அப்சா (25). இவர் கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த தஸ்தகீர் (27) என்கின்ற இளைஞரைக் காதலித்து தனது பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாகவும், தனது கணவர் தஸ்தகீரும் அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கொடுமை செய்வதாகவும் கூறி தனது தாய் வீட்டிற்குத் திரும்பி உள்ளார். இதனைத்தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அப்சாவிற்கு பெண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.

இந்நிலையில், நேற்று காலை தனக்கு தூக்கம் வருவதாகக்கூறிவிட்டு, வீட்டின் மேல் அறையில் ஓய்வெடுக்க செல்வதாக தாயிடம் கூறி சென்றுள்ளார். பின் மாலை தாயிடம் வந்து தனக்குத் தூக்கம் வரவில்லை என்றும், தான் விஷம் குடித்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

இதில் பதறிப்போன அவரது தாய் அக்கம் பக்கத்தினர் உதவியோடு அவரை திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், செல்லும் வழியிலேயே அப்சா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தற்கொலையை கைவிடுக

இதனைத்தொடர்ந்து, தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்சாவின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உயிரிழந்த அப்சா எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது.

அந்த கடிதத்தில், 'தனது கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட 7 பேர் தன்னை வரதட்சணை கொடுமை செய்து துன்புறுத்தினர். நான் பெண் பிள்ளை பெற்ற காரணத்தினால் என்னை வீட்டில் சேர்க்காமல், பெண் பிள்ளையை கொல்லவும் சொல்லி கொடுமைப்படுத்தினார்கள். பெண் பிள்ளையைப் பெற்றெடுத்ததற்கு நான் என்ன செய்வேன். காலம் மாறிவிட்டது. பெண் பிள்ளையைப் பெற்ற காரணத்தினால் தன்னை அடிக்கடி தற்கொலை செய்து கொள்ள தூண்டினர்’ எனவும் கடிதத்தில் எழுதியுள்ளார்.

மேலும், ’என் திருமணச்சீர் மற்றும் எனது போன், சான்றிதழ்கள் அனைத்தையும் பெற்று, என் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும். நஷ்ட ஈடுபெற்று என் குழந்தையின் வருங்காலத்தை பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றும் கடிதத்தில் அப்சா எழுதியுள்ளார். மேலும் இதனையே தான் வீடியோவாகப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் போலீசார் அவர் பயன்படுத்திய செல்போனை மீட்டு, அதில் இருந்த வீடியோ பதிவையும் எடுத்து தற்கொலை குறித்தும் அப்சாவின் கணவர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நிதிஷ் குமாரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது தாக்குதல்... 13 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details