உளுந்தூர்பேட்டை அருகே செஞ்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (40). இவர் லாரி ஓட்டுநராக பணி புரிந்தார். கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் முத்தாண்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்பவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஆனந்தன் மது அருந்தும் பழக்கம் கொண்டவர். இந்நிலையில் நேற்றிரவு (செப்.,14) சத்யாவின் உறவினர் சீனிவாசன் என்பவர் ஆனந்தனுக்கு போன் செய்து திருநாவலூர் அடுத்த கெடிலத்தில் உள்ள டாஸ்மாக்கிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
அதன்படி வீட்டில் இருந்து ஆனந்தன் இரவு சுமார் 9 மணியளவில் மதுக்கடைக்கு சென்றுள்ளார். இதையடுத்து இருவரும் மதுவை வாங்கிக்கொண்டு அருகில் உள்ள முட்புதரில் உட்கார்ந்து அருந்தியுள்ளனர். போதை அதிகமானதால் ஆனந்தன் அங்கேயே இருந்துள்ளார். ஆனால் சீனிவாசன் அதே இடத்தில் ஆனந்தனை விட்டு விட்டு கிளம்பிவிட்டார். சிறிது நேரத்தில் ஆனந்தன் வாயில் நுரை தள்ளியபடியே மயக்கம் அடைந்துள்ளார்.
நேற்றிரவு சுமார் 10 மணி அளவில் அந்த வழியாக வந்தவர்கள் இதைக் கவனித்து ஆனந்தனை அவரது வீட்டில் கொண்டு விட்டனர். ஆனால் ஆனந்தன் மது போதையிலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சீனிவாசன் மதுவில் விஷம் கலந்து கொடுத்து ஆனந்தனை கொலை செய்திருக்கலாம் என சந்தேகித்த ஆனந்தனின் சகோதரர் காசிநாதன் காளி திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் ஆனந்தனின் உடலை கைப்பற்றிய திருநாவலூர் காவல் துறையினர் உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக சந்தேக மரணம் என்ற பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சீனிவாசனுக்கும் ஆனந்தன் மனைவிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருக்கலாம், அதனால் திட்டமிட்டு சீனிவாசன் ஆனந்தனை வரவழைத்து மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்பட்ட நிலையில் காவல் துறையினர் ஆனந்தனின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி இரவு 7 மணியளவில் ஆனந்தன் தனது ஊரிலிருந்து கிளம்பி சென்றபோது தனது நண்பர்களிடம் எனது சகலை (சீனிவாசன்) மது அருந்த அழைப்பதாகக் கூறியுள்ளது தெரியவந்தது. தொடர்ந்து ஆனந்தனின் மனைவி சத்யாவிடம் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியுள்ளார்.