கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இயங்கிவரும் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நூறுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்கள் நிலங்களில் விளைந்த விளை பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (பிப்.22) விவசாயிகள் உளுந்து பயிர்களை விற்பனைக்காக கொண்டு சென்றுள்ளனர். மாலை 3 மணியளவில் விவசாயிகளின் விளைபொருளுக்கு விலை பட்டியல் ஒட்டப்பட்டது. அதில், உளுந்துக்கு குறைந்த அளவே விலை நிர்ணயம் செய்யப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலர்களிடம் நேரில் சென்று முறையிட்டனர். இதனை பெரிதும் பொருட்படுத்தாமல் அலுவலர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் ஒன்றுகூடி சென்னை-சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விற்பனைக்கூட அலுவலர்கள், காவல் துறையினர், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தினால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: விவசாயியைத் தாக்கிய நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள்!