கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். தொடர்ந்து, சிறு, குறு நடுத்தர தொழில் கூட்டமைப்பினர், விவசாய பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக் குழுவினருடன் அவர் கலந்துரையாடினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமான ஆறு மாதங்களிலேயே இங்கு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு மத்திய, மாநில அரசின் நிதியுதவியுடன் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளதாகவும், மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருவதால் கரோனா கட்டுக்குள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
கைக்கான் வளைவு திட்டம் குறித்து பேசிய முதலமைச்சர் மேலும், கைக்கான் வளைவு என்ற இடத்தில் சிறிய அணைகள் கட்டப்படுவதன் மூலம் கள்ளக்குறிச்சிக்கு வரவேண்டிய நீர் சேலம் பகுதிகளுக்கு மட்டும் பயன்படுத்தும் நோக்கம் இருப்பதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ”உபரி நீர் மட்டுமே சேலம் பகுதிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. பாசனத்திற்குத் தேவையான நீரின் அளவு குறித்து ஓய்வுபெற்ற பொறியாளர்கள் ஐந்து பேரின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கணக்கிடும் உபரிநீரின் அளவின் படியே நீர் எடுக்கப்படுகிறது" என்றார்.
முன்னதாக, தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு, மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா உள்ளிட்ட பல அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:பவானிசாகர் அணை நிரம்புவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!