கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள கீரியம்மன் கோயில் அருகே இயங்கிவந்த டாஸ்மாக் மதுபான கடை தைப்பூசம் காரணமாக நேற்று விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடையை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து மது பாட்டில்களைக் கொள்ளையடிக்க முயன்றனர்.
இது பற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்தப் பகுதியில் நின்றுகொண்டிருந்த ஒரு இருசக்கர வாகனம், இரண்டு காலணிகளையும் பறிமுதல்செய்தனர்.
கொள்ளையடிக்க சென்ற இடத்தில் காலணியால் சிக்கிக்கொண்ட சம்பவம் இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை உளுந்தூர் காலனியைச் சேர்ந்த அய்யப்பன் என்ற கட்டட தொழிலாளி தனது வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைக் காணவில்லை என்றும் யாரோ திருடிச் சென்றதாகவும் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் மதுபான கடையின் முன்பாக நின்ற இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணும் - ஐயப்பன் கொடுத்த புகாரிலிருந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணும் ஒன்றாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் மதுபான கடையின் முன்பாக கிடந்த காலணிகளை காவல் துறையினர் ஐயப்பனிடம் காட்டியபொழுது அந்தக் காலணிகள் உளுந்தூர் காலனியைச் சேர்ந்த பவித்ரன், ஸ்ரீகாந்த் ஆகிய இருவரின் காலணிகள் என்று தெரிவித்தார்.
மேலும் இதற்கு ஆதாரமாக அவர்கள் தங்களது செல்போன்களில் வைத்திருந்த புகைப்படங்களைக் காட்டினாள் அதில் இரண்டு காலணிகளும் பவித்திரன், ஸ்ரீகாந்த் ஆகியோருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இருவரையும் பிடித்த காவல் துறையினர் தொடர்ந்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
கொள்ளையடிக்கச் சென்ற இடத்தில் காலணியால் சிக்கிக்கொண்ட சம்பவம் அப்போது தங்களது நண்பர் தீனா என்பவரோடு சேர்ந்து மூன்று பேரும் ஐயப்பன் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடி டாஸ்மாக் மதுபான கடைகள் தைப்பூசத்தையொட்டி மூடியிருக்கும் என்பதால் நேற்று செவ்வாய்க்கிழமை தாங்கள் குடிப்பதற்குப் போக மீதி இருக்கக்கூடிய மதுபாட்டில்களை விற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்து டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து நான்கு மதுபாட்டில்கள் உள்ள பெட்டிகளை மதுபோதையில் எடுத்து வரும்போது அதைத் தூக்க முடியாமல் அதே இடத்தில் போட்டுச் சென்றதும் டாஸ்மாக் மதுபான கடையிலிருந்த 5000 ரூபாய் ரொக்கப் பணத்தையும் அவர்கள் கொள்ளை அடித்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்களைக் கைதுசெய்த காவல் துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மது போதைக்காக டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்களை கொள்ளையடிக்கச் சென்ற அவர்கள் அருகிலிருந்த வீட்டினரின் இருசக்கர வாகனத்தையும் திருடிய இளைஞர்கள் காலணியை விட்டுச் சென்றதால் அதனைக் கைப்பற்றிய காவல் துறையினர் காலணியைக் கொண்டே குற்றவாளிகளைக் கைதுசெய்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கண்ணுடையநாயகி அம்மன் கோயிலில் செவ்வாய் பொங்கல் விழா!