கள்ளக்குறிச்சி:ரிஷிவந்தியம் வட்டம் அலியாபாத்பாளையத்தைச் சேர்ந்தவர் கணபதி. இவரின் மனைவி ஆனந்தாயி (73). கணவரை இழந்த மூதாட்டி, அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் தங்கி, பூஜை மற்றும் பராமரிப்பு உதவி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கோயில் வாசலை மூடிவிட்டு வளாகத்தில் தூங்கச் சென்றுள்ளார்.
பின்னர், அடுத்தநாள் காலை 6.30 மணிக்கு பொதுமக்கள் சிலர் கோயிலுக்குச் சென்றனர். அப்போது, அங்கிருந்த ஆனந்தாயி தலையில் ரத்த காயங்களுடன் கோயில் வளாக பின்புறம் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக இதுகுறித்து காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மூதாட்டி இறப்புக்கான காரணம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே சம்பவ இடத்தில் காவல் துறையினர் ஆய்வு செய்துகொண்டிருந்தபோது கோயிலின் உட்புறம் ஆண் நபரின் காலனி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. காவல் துறை அதிகாரிகள் காலணியை கொண்டு மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் வேட்டையை நடத்தினர்.
மோப்ப நாய், சில நிமிடம் கோயிலினுள் சுற்றிவிட்டு பின்னர் கோயிலுக்கு அருகாமையில் 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஏரிக்கரையின் நடுவில் மது அருந்ததும் இடத்தில் நின்றது. உடனடியாக காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணையை தீவிர படுத்தினர்.
தொடர்ந்து, நேற்றைய முன்தினம் இரவு அந்த இடத்தில் யார் மது அருந்தியது என விசாரித்த நிலையில், கார்த்திக் ஜெயசீலன் மற்றும் அலெக்ஸ் ஆகிய மூவரும் இரவு 10 மணிக்கு மேல் ஒன்றாக மது அருந்தியது தெரியவந்தது. பின்னர், ஜெயசீலன் இரவு 10:45 மணிக்கு கார்த்தி 11:15 மணியளவில் அங்கிருந்து கிளம்பிச் சென்றதும் தெரியவந்தது.
உடனடியாக அலெக்ஸை பிடித்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, தலைக்கேறிய போதையில் தனியாக நடந்து சென்ற அலெக்ஸ், அங்கிருந்த கோயிலின் உள்ளே செல்ல முற்பட்டுள்ளார். உடனடியாக அங்கிருந்த மூதாட்டி ஆனந்தாயி குடித்துவிட்டு கோயிலுக்குள் வரக்கூடாது என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அலெக்ஸ், போதையில் மூதாட்டியை எட்டி உதைத்து, மூர்க்கத்தனமாக தாக்கியிருக்கிறார்.
இதில், மயங்கி கீழே விழுந்த மூதாட்டியை கோயிலின் பின்புறமாக இழுத்துச் சென்று உடலை அங்கேயே போட்டுவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. பின்னர், அலெக்ஸை கைது செய்த காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:விழுப்புரத்தில் பைனான்சியர் வெட்டி கொலை!