கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகத் திறப்பு விழா இன்று (ஆக. 31) நடைபெற்றது. கள்ளக்குறிச்சி, சேலம் - சென்னை பைபாஸ் சாலையில் ஏமப்பேர் அருகில் உள்ள இசை டவர் என்ற அடுக்குமாடிக் கட்டடத்தில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் பாலசுந்தரம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இந்நிலையில், அலுவலகத்தைத் திறந்துவைக்க வந்த மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கு கள்ளக்குறிச்சி சுங்கச்சாவடியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி நகரின் வழியே மேள தாளங்களுடன் ஊர்வலமாக அவர் அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, இசை டவர் கட்டடத்தில் உள்ள மாவட்டக் கட்சி அலுவலகத்தை கட்சி நிர்வாகிகளுடன் சென்று அவர் திறந்து வைத்தார்.