கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை விருத்தாசலம் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் உளுந்தூர்பேட்டை மட்டுமின்றி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். தற்போது கரோனா தொற்றுக் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் இப்பள்ளியில் உள்ள மிகப் பெரிய மைதானத்தில் சுற்றுப்புறங்களை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் காலையில் நடைபயிற்சியும், விடுமுறை நாள்களில் கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, பேட்மிட்டன் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
பள்ளி மைதானத்தில் விளையாட தடை - போராட்டத்தில் ஈடுபட்ட விளையாட்டு வீரர்கள் - students protest
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் விளையாட தடை விதித்ததால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று (நவ.08) காலை சுமார் 11 மணி அளவில் விளையாட்டில் ஆர்வம் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்டோர் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்திற்கு வந்தனர். அப்போது அங்கு வந்த பள்ளியின் தலைமையாசிரியர் ராமச்சந்திரன், பள்ளியில் உள்ள மைதானத்தில் யாரும் விளையாடக் கூடாது எனவும், விளையாடிய மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி வெளியே துரத்தியதாக கூறப்படுகிறது. இதனால் விளையாட்டு வீரர்களுக்கும், தலைமையாசிரியருக்கும் பள்ளியில் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் அனுமதி கொடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த மாணவர்கள், உளுந்தூர்பேட்டை விருத்தாசலம் சாலையில் மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிறகு தகவலறிந்து விரைந்து சம்பவ இடத்திற்கு சென்ற உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், சாலை மறியலில் ஈடுபட்ட விளையாட்டு வீரர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியில் விளையாட்டு வீரர்கள் பள்ளி மைதானத்தில் விளையாட அனுமதி கிடைத்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இச்சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.