கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையை அடுத்த குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்குபாலன். இவரது மகன் மணிகண்டன் (16) இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஆன்லைன் வீடியோ கேமில் ஆர்வமுள்ள மணிகண்டன் பெரும்பாலான நேரங்களில் தனது பெற்றோரின் செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.
கேமில் மூழ்கியிருந்தபோது காலைச் சுற்றிய பாம்பு...
அவ்வாறு இன்று (ஜூன். 16) குளக்கரையில் உள்ள பாறையில் சாயந்தபடி மணிகண்டன் ஆன்லைனில் வீடியோ கேம் விளையாடத் தொடங்கியுள்ளார். ஆழந்த சிந்தனையில் அவர் கேம் விளையாடிகொண்டிருந்த நிலையில், அவரது காலை பாம்பு ஒன்று சுற்றியுள்ளது. அப்போது அந்த வழியாகச் சென்ற மாணவன் ஒருவர் மணிகண்டனிடம் காலில் பாம்பு சுற்றியிருப்பதைப் பார்ந்து அதிர்ந்துபோய் அவரிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து உடனடியாக அலறியடித்த மணிகண்டன் காலை உதறியபோது பாம்பு அவரைக் கடித்துள்ளது.
இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.