கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தில் சில தினங்களுக்கு முன்பு பாதி எரிந்த நிலையில் அடையாளம் காண முடியாத அளவிற்குப் பெண்ணின் சடலம் இருப்பதாக சங்கராபுரம் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அந்த உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர், இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல்ஹக் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் உடனடியாக இறந்த பெண் யார் என்பது குறித்தும், இறப்பு குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் பெயரில், திருக்கோவிலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜி.கே. ராஜு மேற்பார்வையில் சங்கராபுரம் ஆய்வாளர், நான்கு உதவி ஆய்வாளர்கள், குற்றப்பிரிவு காவலர்கள் எனத் தனிப்படைகள் அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இந்த விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த முருகேசனின் மனைவி வெண்ணிலா என்பவர் காணாமல்போனது தெரியவந்தது.
பின்னர் மேற்கொண்ட விசாரணையில், வெண்ணிலாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமாகாத ரஜினிகாந்த் என்பவருக்கும் இடையே திருமண பந்தத்தைத் தாண்டிய உறவு இருந்தது தெரியவந்தது. பின்னர் இறந்துபோன வெண்ணிலாவின் செல்போன் எண்ணை பரிசோதனை செய்ததில், ரஜினிகாந்தின் செல்போனிலிருந்து வெண்ணிலாவின் செல்போன் எண்ணிற்கு பலமுறை அழைப்புகள் சென்றதும் இருவரும் பேசிவந்ததும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தனிப்படை காவல் துறையினர் ரஜினிகாந்தை காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் ரஜினிகாந்த் வெண்ணிலாவை கொலைசெய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், வெண்ணிலா ரஜினிகாந்திடம் திருமணம் செய்துகொள்ளாமல் தன்னுடன் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.