ஈரோடு மாநகராட்சிப் பகுதியிலுள்ள பெரும்பள்ள ஓடை கரையோரங்களின் இரு பகுதிகளிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 12 கிலோமீட்டர் நீளத்திற்கு நடைபாதையுடன் கூடிய பூங்காக்கள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பூங்காக்கள் அமைப்பதற்காக பெரும்பள்ள ஓடை கரையோரங்களிலுள்ள பழையபாளையம், பாரதிபுரம், மணல்மேடு பகுதிகளில் குடியிருக்கும் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து அகற்றுவதற்காக, அப்பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு மாநகராட்சித் துறையினர் நோட்டீஸ்களை வழங்கி வீடுகளை காலிசெய்ய வற்புறுத்திவருகின்றனர்.
ஏற்கனவே நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் குடியிருப்போர் காலிசெய்திட உரிய அவகாசம் வழங்கிட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக, கரோனா தொற்று பாதிப்புக் காலத்திலும் உடனடியாக மக்களை காலிசெய்திட கூறிவருகின்றனர்.
இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் குடும்பத்துடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள், அவர்களது கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றிடுவது என்றும், முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவுசெய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட மக்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது கரோனா ஊரடங்கு உத்தரவு காலத்தில் முறையான வருவாயின்றி வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில். உரிய காலஅவகாசம் வழங்கிடாமல் 50 ஆண்டுகளாக குடியிருக்கும் வீடுகளை உடனடியாக காலிசெய்யச் சொல்வது வேதனைக்குள்ளாக்குகிறது.
அரசு தங்களுக்கு மாற்று இடமோ, அடுக்குமாடி குடியிருப்போ எந்தவித உதவிகளையும் செய்யாமல் தங்களை அதே வீடுகளில் குடியிருக்க மட்டும் அனுமதித்திட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:சாத்தான்குளம் விவகாரத்தில் முதலமைச்சர் கருத்து தெரிவிக்காதது ஏன்? - கனிமொழி