உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மணங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதி சுரேஷ். இவர் உளுந்தூர்பேட்டை பகுதியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராகப் பணியாற்றிவருகிறார்.
சில நாள்களுக்கு முன்பு உளந்தண்டார்கோயிலில் உள்ள பள்ளியில் வரையப்பட்டிருந்த அம்பேத்கர் உருவப் படத்தினை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தொடர்ந்து அவமதிப்பு செய்துவந்தனர். இது தொடர்பாக செய்தி சேகரித்து தொலைக்காட்சியில் வெளியிட்டதால் ஆதி சுரேஷுக்கு கொலை மிரட்டல்விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்யாமல் அலட்சியமாக இருந்துவந்துள்ளதாகவும், இதனால் இரு தரப்பினருக்குமிடையே பகை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், தனது பணியினை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய ஆதி சுரேஷை ஐந்து பேர் கொண்ட கும்பல் அரிவாள், இரும்பு கம்பி, தடி போன்ற ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியும், தலையில் சரமாரியாக வெட்டியும் உள்ளது. இதனால் நிலைகுலைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே மயங்கிவிழுந்துள்ளார்.
செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் அவர், இறந்துவிட்டதாக நினைத்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள மக்கள் சுரேஷை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், அவர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கொலைவெறித் தாக்குதலுக்குள்ளான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், காவல் துறையினர் ஒருதலைபட்சமாகச் செயல்பட்டதாலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: அர்னாப் கோஸ்வாமி மீது தாக்குதல்? இருவர் கைது!