மயிலாடுதுறை:கள்ளக்குறிச்சி மாவட்டம்சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த மாணவி ஶ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளி வாகனங்கள், உடமைகளுக்கு தீ வைக்கப்பட்டு கற்கள்வீசி தாக்குதல் நடைபெற்றது.
தனியார் பள்ளி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை திங்கள்கிழமை ஒரு நாள் தனியார் பள்ளிகள் இயங்காது என்று தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர் நலச்சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் என்.எஸ்.குடியரசு கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உயிரிழந்த தனியார் பள்ளி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்விவகாரத்தில் காவல்துறையினரும், கல்வித்துறை அதிகாரிகளும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தனர். அந்த அடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் என்ற போர்வையில் சமூக விரோதிகள் பலர் பள்ளிக்குள் நுழைந்து பள்ளி வாகனங்கள், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளனர்.