கள்ளக்குறிச்சி மாவட்டம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ரியாஸ். இவர் துபாயில் பணியாற்றிவருகிறார். இந்நிலையில் தன்னுடைய திருமணத்திற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் துபாயிலிருந்து வந்த ரியாஸுக்கு, கடந்த 15 நாள்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், ரியாஸ் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த பெண்ணை கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ரியாஸுக்கு திருமணம் நடைபெறுவதைத் தெரிந்துகொண்ட அப்பெண், ரியாஸ் அகமது வீட்டிற்குச் சென்று, “என்னை காதலித்துவிட்டு எப்படி வேறு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறாய் பார்ப்போம்” என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இருந்தபோதிலும், தனது திருமணத்தை முடித்த ரியாஸ், திருமணமாகி 15 நாள்களாக வெளியில் செல்லாமல் வீட்டிலிருந்த வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (நவ. 30) மாலை தனது இருசக்கர வாகனத்தில் தேநீர் அருந்துவதற்காக, கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது சுமார் 8 மணியளவில் மக்கள் போக்குவரத்து அதிகம் நிறைந்த சேலம் முக்கியச் சாலையில், மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் ரியாஸை அரிவாளால் வெட்டியுள்ளனர்.