கள்ளக்குறிச்சி: ராமச்சந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் வீரமுத்து. இவரது வீட்டில் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதி 17 லட்சம் ரூபாய் பணம், 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 3 சவரன் தங்க மோதிரம் உள்ளிட்டவை திருடப்பட்டது.
திருடர்களுக்கு வலை
இது தொடர்பாக வீரமுத்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கடந்த சில மாதங்களுக்குமுன் வழக்கில் தொடர்புடைய சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த அம்பிகா, அஜித்குமார், சீனிவாசன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரனை மேற்கொண்டனர்.
விசாரனையின் அடிப்படையில் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க, குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
திருட்டு கும்பல் கைது
இந்நிலையில், நேற்று (ஜூலை 17) மதியம் கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் கிராமம் சாமியார் மடம் என்ற இடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் 3 பேர் நின்றுகொண்டிருந்தனர்.
அவர்களை மடக்கிப் பிடித்த தனிப்படை காவல் துறையினர், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கள்ளக்குறிச்சி அண்ணா நகர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீரமுத்து வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது.
ரூ.8.85 லட்சம் பறிமுதல்
மேலும், இவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த காயத்ரி (41), லெனின் (30), வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (35) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்த காவல் துறையினர், கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அவர்களிடமிருந்து 8 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம், ஒரு கார், ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: கோலம் போட்ட பெண்ணிடம் நகை பறிப்பு- பகீர் சிசிடிவி காட்சிகள்!