கள்ளக்குறிச்சி:உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குள்பட்ட திருவெண்ணெய்நல்லூர் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு கீரியம்மன் கோயிலில் பொது குடிநீர் கிணறு உள்ளது. ஆண்டுதோறும் ஆடி திருவிழாவிற்காக இந்தக் கிணற்றிலிருந்து பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக மின்மோட்டார் மூலம் நீர் எடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 1) அதிகாலை அந்தப் பகுதியில் இரவு நேர குற்றப்பிரிவு காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு கும்பல், ஒரு டாட்டா ஏசி வாகனத்தில் நீர்மூழ்கி மோட்டார், மின் கம்பிகளை எடுத்துச்செல்வதைக் கண்டறிந்தனர்.
அவர்களைத் தடுத்து நிறுத்தியபோது, அந்தக் கும்பலில் இருந்த இருவரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். மற்றவர்கள் தப்பிச் சென்றனர். பிடிபட்ட இருவரிடம் காவல் துறையினர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அவர்கள் உளுந்தூர்பேட்டை உளுந்தாண்டவர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.