கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் அதே பள்ளியில் படித்த மாணவி கடந்தாண்டு ஜூலை 13ஆம் தேதி அதிகாலை விடுதி வளாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலை மீட்ட பள்ளி நிர்வாகம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. இதனிடையே பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இதுதொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசரணையின் போது, மாணவி இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், சிபிசிஐடி விசாரணை சரியில்லை என்றும் அவரது தாய் தொடர்ந்து குற்றச் சாட்டுக்களை வைத்து வந்தார்.
இதனால் வழக்கில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்த உயர் நீதிமன்றம், விசாரணை தொடர்பான அறிக்கைகளை பெற்று வருகிறது. முன்னதாக, இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலன் விசாரணை குழு மற்றும் சிபிசிஐடி ஆகியவற்றின் அறிக்கைகளை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தாக்கல் செய்தார்.
214 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மாணவி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என்றும் கூறினார். அப்போது மனுதாரர் ராமலிங்கம் தரப்பில், வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி, தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் செல்போனை ஒப்படைத்தால் தான் விசாரணை நடத்த முடியும் என்றில்லை. அதை ஒப்படைப்பது குறித்து விளக்கத்தை பெற்று தெரிவிக்க அவகாசம் கோரினார்.