மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். இதில், பொதுப்பிரிவு தனியார் மருத்துவக் கல்லூரிகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு என தனியாக இடம் ஒதுக்கப்படும். நடப்பாண்டில் மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 7.5 விழுக்காடு அடிப்படையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் 405 மாணவர்கள் சேர தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கனவு எட்டாக்கனியாகவும், தாய்மொழியில் படித்தவர்கள் மருத்துவக் கல்வி பயில முடியாமல் போனது. இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளை வடமாநிலத்தவர்கள் ஆக்கிரமித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள 7.5 உள் இடஒதுக்கீடு அரசு மாணவர்களின் மருத்துவக் கனவை உறுதிப்படுத்தியுள்ளது. சமூக நீதியை போற்றிட தமிழ்நாடு, மற்ற மாநிலங்களுக்கு எப்போதும் முன்னோடி என்பதே நிதர்சனம்.
அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் தேனியைச் சேர்ந்த ஜீவித் குமார் முதலிடத்திலும், கள்ளக்குறிச்சி மாணவர் அன்பரசன் இரண்டாம் இடத்திலும், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திவ்யதர்ஷினி மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
அந்தவகையில், கள்ளக்குறிச்சி அருகே தச்சூர் அன்பு நகரைச் சேர்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்த சாமிதுரை - இந்திரா தம்பதியரின் மகன் அன்பரசன். இவர் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து வந்துள்ளார்.