கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அரும்பராம்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 75 க்கும் அதிகமான கூலித்தொழிலாளர்கள் கோவா மாநிலத்தில் மீன் பிடிக்கும் தொழில் செய்துவந்தனர்.
ஊரடங்கால், வேலையின்றியும் உணவின்றியும் கோவாவில் தாங்கள் படும் இன்னல்களை வீடியோவாக பதிவு செய்து தங்களது குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த ரிஷிவந்தியம் சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், கோவாவிலுள்ள கூலித்தொழிலாளிகளை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு பேசினார். அப்போது தங்களைச் சொந்த ஊருக்கு திரும்ப உதவுமாறு தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
கோவாவில் இருந்து வீடு திரும்பிய கூலி தொழிலாளர்கள்! இதனையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா மூலம், கோவா மாநிலத்தின் ஆட்சியரை தொடர்பு கொண்ட கார்த்திகேயன், கூலித்தொழிலாளிகளுக்கு உணவு, தங்குமிடம் வழங்குவதற்குத் தேவையான உதவிகளை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், அம்மாநில ஆட்சியர் வங்கிக்கணக்கில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் செலுத்தியதோடு, தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பவும் முயற்சிகள் மேற்கொண்டார். தொடர் நடவடிக்கையின் காரணமாக, கோவாவில் சிக்கித் தவித்த 75க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் மூன்று பேருந்துகள் மூலம் அங்கிருந்து அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்நிலையில் முதற்கட்டமாக இரண்டு பேருந்துகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் நேற்று இரவு(மே.9) கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையான மூங்கில்துறைப்பட்டு பகுதிக்கு வந்தடைந்தனர். அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், யாருக்கும் ரைவஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து அவரவர் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுரைக்கூறி அனுப்பி வைத்தனர்.
கோவா மாநிலத்தில் சிக்கித் தவித்த தங்களைச் சொந்த ஊருக்குத் திரும்ப உதவிய ரிஷிவந்தியம் சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனுக்கும், மாவட்ட ஆட்சியர் கிரண்குராலாவிற்கும் கூலித்தொழிலாளிகள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இதையும் பார்க்க: இந்தியாவில் கரோனா பாதிப்பாளர்கள் 30 விழுக்காடு மீட்பு!