தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் பள்ளிகள் ஸ்டிரைக் அறிவிப்பு - அமைச்சர் நாளை பேச்சுவார்த்தை? - பள்ளிகள் சங்க நிர்வாகம்

பள்ளிகளை மூடும் போராட்டம் அறிவிப்பின் எதிரொலியாக தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த இளங்கோவன்
செய்தியாளர்களைச் சந்தித்த இளங்கோவன்

By

Published : Jul 17, 2022, 10:47 PM IST

கள்ளக்குறிச்சி:சின்ன சேலம் தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் பள்ளிகள் அடித்து சூறையாடப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் தர்மபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய இளங்கோவன், “கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவி ஸ்ரீமதியின் தற்கொலை அதிர்ச்சிகரமானது. இது தொடர்பான அரசு விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். கல்வியை வழங்கி வரும் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளும், ஆசிரியப் பெருமக்களும், எங்களிடம் பயிலும் பல லட்சம் மாணவ, மாணவியரை எங்கள் சொந்த குழந்தைகள் போல் பாதுகாத்து வருகிறது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த துயரமான சூழலைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் ஒன்று சேர்ந்து அந்தப் பள்ளியில் பயிலும் 3ஆயிரத்து 500 மாணவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களின் சான்றிதழ்களை அழித்ததும், பள்ளி வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தியதும், பள்ளி உடைமைகளை கொள்ளையடித்துச் சென்றதும் மன்னிக்க முடியாத சமூக விரோதச் செயல்.

இத்தைகைய நிகழ்வுகள் வருங்காலத்தில் எந்த நிறுவனத்திலும் நடைபெறாத வண்ணம், தமிழ்நாடு அரசு பாதுகாப்பு விதிகளை உருவாக்கி அரசாணை பிறப்பித்திட வேண்டும். இது குறித்து தமிழ்நாட்டிலுள்ள உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் நாளை (ஜூலை 18) தனியார் பள்ளி நிர்வாகிகளும், தனியார் பள்ளி பெற்றோர் சங்கங்களும் சேர்ந்து மனு அளிக்கவுள்ளோம். இதனால் நாளை தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகள் செயல்படாது” என தெரிவித்தார்.

மேலும் தனியார் பள்ளிகள் விதிகளை மீறி விடுமுறை வழங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் இயங்காது என இளங்கோவன் உறுதியாக தெரிவித்துள்ளார். “நாங்கள் ஆட்சியர், எஸ்பி, அமைச்சர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை சந்திக்க போகிறோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த இளங்கோவன்

இந்நிலையிலி பள்ளிகளை மூடும் போராட்டம் அறிவிப்பின் எதிரொலியாக தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை (ஜூலை 18) காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி வன்முறைக்கு முதலமைச்சர் தான் முழுப்பொறுப்பு - சரமாரியாக சாடிய எடப்பாடி பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details