தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மருத்துவம் படிக்க எதற்கு நீட்" - அமைச்சர் பொன்முடி கேள்வி!

பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்கும் அதிக மதிப்பெண்களை கொண்டே மருத்துவம் படிக்கலாம் என்றும் பின்னர் எதற்காக நீட் தேர்வு எழுத வேண்டும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

Minister Ponmudi
அமைச்சர் பொன்முடி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 7:56 AM IST

Ponmudi Speech

கள்ளக்குறிச்சி:திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலம்பாடி பகுதியில் பகுதி நேர நியாய விலை கடையை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, அரகண்டநல்லூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் 2 கோடியே 41 லட்ச ரூபாய் மதிப்பிலான வேளாண் விரிவாக்க மையத்தினை பார்வையிட்டார். மேலும் 1 கோடியே 62 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலகத்தையும் ஆய்வு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு என 3 கோடியே 53 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தையும் அமைச்சர் பொன்முடி பார்த்தார். இந்த நிகழ்வின் போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அரசு துறை அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் திமுக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டம் குலதீப மங்கலத்தில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தையும், விளந்தை கிராமத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலம் கருதி அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை துவக்கி வைத்து, அதில் இளைஞர்களுடனும், மாவட்ட ஆட்சியருடனும் இணைந்து அமைச்சர் பொன்முடி வாலிபால் விளையாடியது அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "கிராமப்புற மற்றும் நகர்புற மாணவர்களின் நலனுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். பன்னிரண்டாம் வகுப்பில் எடுக்கப்படும் அதிக மதிப்பெண்கள் அடிப்படையிலே மருத்துவம் படிக்கலாம் என்பதை தொடர்ந்து வழியுறுத்தி வருகிறார்.

அவரைப் போன்றே தமிழ்நாட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நீட் எதற்கு என்கிற தொடர் முழக்கத்தை ஒவ்வொரு மேடையில் தமிழ்நாட்டு மக்களிடையே விளக்கி வருகிறார். அமெரிக்கா மற்றும் அண்டை நாடுகளில் தற்போது பணியாற்றி வரும் பல மருத்துவர்கள் இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து சென்றவர்கள்.

அவர்கள் எந்த நீட் தேர்வு எழுதி அங்கே பணி செய்கிறார்கள். என்னுடைய குடும்பத்திலேயே 12 நபர்கள் மருத்துவர்களாக உள்ளனர். எனது தம்பி சாதாரண அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து மருத்துவராக பணியாற்றினார். தற்போது அவர் இல்லை, அதேபோன்று எனது மருமகள், மகள் மற்றும் குடும்பத்தைச் சார்ந்த 12 பேர் மருத்துவராக மக்களுக்கு தொண்டாற்றி வருகின்றனர்.

இங்கே அமர்ந்திருக்கும் பல பெண்கள் அன்றைய காலகட்டங்களில் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளீர்கள். ஆனால் இன்று நீங்கள் உங்களுடைய பேரக் குழந்தைகளை பள்ளிக்கு செல், பள்ளிக்கு செல் என்று கூட்டிக் கொண்டு போய் பள்ளியில் விட்டு விட்டு வருகிறீர்கள். இதற்கெல்லாம் காரணம் பெரியார் மற்றும் அண்ணா ஆகியோரின் திறமையான வழி நடத்தலே.

தாய்மார்கள் நீட் குறித்து மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் மற்றும் பாதிப்பினை பற்றி உங்கள் கணவர்களுடன் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் தமிழக மக்களுக்காக பல நலத்திட்ட உதவிகளை செய்து வரும் நம்முடைய தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியை மேம்படுத்த நாம் அவருக்கு ஆதரவாக நின்று அவருடைய கைகளை வலுப்படுத்துவோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஊழலைப் பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதியில்லை: முதலமைச்சர் ஸ்டாலின் பாய்ச்சல்!

ABOUT THE AUTHOR

...view details