கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள அருளம்பாடியிலிருந்து மேல்சிறுவள்ளூர் செல்லக்கூடிய சாலையில், மணலூர் கிராம நிர்வாக அலுவலர் நவநீதம் மோட்டார் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற வாகனத்தின் முன்னால் கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்த டிராக்டரை நவநீதம் முந்திச்செல்ல முயன்றுள்ளார்.
இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த அவர், சாலையோரம் இருந்த கொடிக்கம்பத்தின் மீது மோதி டிராக்டருக்கும், ட்ரெய்லருக்கும் இடையே விழுந்துள்ளார். இதில் டிராக்டரின் வலது பக்க சக்கரம் நவநீதத்தின் இடது கால் தொடையின் மீது ஏறி சென்றுள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கிராம நிர்வாக அலுவலர், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மூங்கில்துறைப்பட்டு காவல் துறையினர், விபத்தில் படுகாயமடைந்த கிராம நிர்வாக அலுவலர் நவநீதத்தை 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.