கரோனா வைரஸ் தொற்று காரணாமாக நாடுமுழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், காள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் தலைமையிலான குழு சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட்டுவந்தனர்.
இதனையடுத்து கள்ளக்குறிச்சி அருகேயுள்ள மாமந்தூர் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல் துறையினர், அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் காரின் டிக்கியிலிருந்த இரண்டு லாரி டியூப்களில் 110 லிட்டர் கள்ளச்சாராயத்தை விற்பனைக்காக எடுத்து வரப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து சீனிவாசன் என்பவரைக் கைது செய்த காவல் துறையினர், விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 110 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: போலீசாரைத் தாக்கிய கள்ளச்சாராயம் காய்ச்சிய தம்பதி!