கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி பகுதியில் சென்னை - திருச்சி நான்கு வழிச்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடியில் 93 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
தற்பொழுது பாஸ்ட் ட்ராக் மூலம் கட்டண வசூல் நடைபெற்று வருவதால், சுங்கச்சாவடி நிர்வாகம் 28 தொழிலாளர்களை நிரந்தரப்பணி நீக்கம் செய்து முதல் கட்ட ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனைக்கண்டித்து சுங்கச்சாவடி தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அக்.01ஆம் தேதி சுங்கச்சாவடி அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்திற்கு திமுக, அதிமுக, கம்யூனிஸ், பாமக, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
தொழிலாளர்களின் பணிநீக்கம் நடவடிக்கையை ரத்து செய்தது தொடர்பாக, உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் தொழிலாளர்களின் கோரிக்கையினை ஏற்க மறுத்து, பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறினர்.