கள்ளக்குறிச்சி:சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதியின் உயிரிழப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், அவர் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் கருதுகின்றனர். இதனால் பெற்றோர், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மாணவியின் உடைகளில் ரத்த கறைகள் இருந்ததாகவும் மாணவியின் உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மாணவியின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு, சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர் அமைப்பினர் இன்று (ஜூலை 17) பள்ளி முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பொதுமக்களும் களமிறங்கினர். இதனால், சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.
ஒருகட்டத்தில், காவல் துறையினரின் எச்சரிக்கையை மீறி பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் நுழைய முயன்றனர். அவர்களை தடுக்க காவல் துறையினர் முயற்சி செய்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேரிகார்டுகளை உடைத்துக்கொண்டு மாணவர்கள், பள்ளி வளாகத்திற்குள் செல்ல முயன்றனர்.