சென்னை: கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கடந்த 17ஆம் தேதி கலவரம் வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியை சூறையாடி 40-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்குத் தீ வைத்தனர். இந்த கலவரத்தில் போலீசாரும் காயமடைந்தனர்.
கலவரத்தில் ஈடுபட்டதாக சுமார் 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும் வாட்ஸ்-அப் குழு அமைத்து போராட்டக்காரர்கள் ஒன்று கூடி கலவரத்தில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து வன்முறையைத் தூண்டும் விதமாக செயல்பட்டதாக 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பான வழக்கு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை கையாள 18 காவல் துறை அலுவலர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். குழுவில் 6 டி.எஸ்.பிக்கள், 9 ஆய்வாளர்கள், மூன்று சைபர் கிரைம் பிரிவு அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.