கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான்சி. இவர் தேவபாண்டலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
ஜான்சி தேசிய திறனாய்வு தேர்வில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேர்ச்சி பெற்றும் இதுவரை ஊக்கத் தொகை கிடைக்கவில்லை. இதுகுறித்து ஜான்சி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அந்த மனுவில், 2017-18ஆம் கல்வியாண்டில் அரம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயின்றபோது, மத்திய அரசின் தேசிய திறனாய்வு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மாதம் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை கிடைக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊக்கத்தொகை கிடைக்கவில்லை. இது குறித்து தற்போது பயிலும் தேவபாண்டலம் அரசு பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது ஏற்கனவே பயின்ற அரசம்பட்டு பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வு தேர்ச்சியினை கணினியில் பதிவேற்றம் செய்யாததால், ஊக்கத்தொகை கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
இதுகுறித்து அரசம்பட்டு பள்ளியிலும், கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலகத்திலும் கேட்டபோது, பதிவேற்றம் செய்யாததால் ஒன்றும் செய்ய முடியாது என கூறிவிட்டனர்.
இதனால் கடந்த 2 ஆண்டிற்கும், மீதமுள்ள 2 ஆண்டிற்கும் ஊக்கத் தொகை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உரிய விசாரணை நடத்தி எனக்கு கிடைக்க வேண்டிய ஊக்கத் தொகையினை பெற்றுத் தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.