கள்ளக்குறிச்சிகலவரத்தில் தீக்கிரையாகிய பள்ளி மாணவ மாணவியர்களுக்கான சான்றிதழ்கள் வரும் 10 நாட்களுக்குள் வழங்கப்படும் எனவும்; சம்பந்தப்பட்ட பள்ளியை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, அறிக்கை தயார் செய்து மீண்டும் திறக்க இரண்டு நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும் எனவும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
கணியாமூர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி மாணவி ஒருவர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஜூலை 17ஆம் தேதி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அப்பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டு தீக்கிரையாகியது.
இதனையடுத்து பள்ளி கலவரத்தில் ஈடுபட்டவர்களை வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீசார் கைது செய்து வரும் நிலையிலும் பள்ளி மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையிலும் பள்ளி வளாகத்திற்குள் யாரையும் அனுமதிக்காத நிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில் கணியாமூர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியை விரைந்து திறக்க உத்தரவிடக் கோரி, லதா கல்வி சங்கத்தின் பொருளாளர் முருகேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆக.23ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் 10 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து கணியாமூர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியை திறப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை தயார் செய்து வருவதாகவும்; விரைவில் பள்ளி திறப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே கணியாமூர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் 200க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை இன்று (செப்.6) நேரில் சந்தித்து கணியாமூர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் அந்நிறுவனத்தின் மற்றொரு பள்ளிகளில் உடனடியாக அனைத்து வகுப்பினருக்கும் நேரடி வகுப்புகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
மேலும் இப்பள்ளியை பராமரிக்க அனுமதி வழங்கி, உடனடியாக அதே பள்ளியில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக்கூறி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அந்த மனுவில் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகவும், இரண்டு தினங்களில் பள்ளி பராமரிப்புப் பணிகளை தொடங்க அனுமதி வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச்சந்தித்த பெற்றோர் சந்திரமோகன், மாவட்ட ஆட்சியர் பள்ளியைத் திறப்பது குறித்து இரண்டு நாட்களில் அனுமதி வழங்குவதாகவும், மேலும் பள்ளி கலவரத்தில் கலவரக்காரர்களால் எரித்து சேதப்படுத்தப்பட்ட பள்ளி மாணவ மாணவிகளின் சான்றிதழ்களும் 10 நாட்களுக்குள் வழங்கப்படும் என உறுதி அளித்ததாகவும் மாவட்ட ஆட்சியர் அளித்த உறுதி நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை கடற்கரைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கினை பயன்படுத்தினால் அபராதம்; கண்காணிக்க குழு